வானத்தில் கண்சிமிட்டிய ஒற்றை விண்மீனை
ஒருவரும் அறியாது உனக்காய் களவாடி
கைக்குட்டைக்குள் பொதிந்து வைத்தேன்….
நீயும் நானும் தன்னந்தனியே ஏகாந்தவெளியில் சந்திக்கையில்
இதயம் சுமந்த அன்பை
முத்தமழையால் நீ பொழிகையில்
ஈடாய் உனக்கதை பரிசளிக்க….
விரைவில் வந்துப் பெற்றுக்கொள்….
வானம் என்னைத் தேடுகிறது….
பறிகொடுத்த தன் விண்மீனை மீட்டெடுக்க……
கவிதை
நினைவுகளை கிளறி
கடந்த காலத்தை
கடைந்தெடுத்து
தவில் பாடி
ஒற்றைக் கனவில்
படகோட்டும் பலம்
தனிமைக்கே உரித்து
சிந்தனைத் திறன்
செயலாய் உருவெடுக்க
உடலும் உள்ளமும்
நின் மதிகொள்ள
இடம் கொடுத்து
வரம் தருவது
தவம் பெறும்
தனிமையில்தான்
சுய சிந்தனைக்கு
தாள்ப்பாள் இட்டு
காப்ரேட் கம்பனிகளின்
காசோலைக்கு கவிழ்ந்து
காலமோட்டும் காலமதில்
கொரோனா கொடுத்த
வைர விடுதலை
தனிமைப்படுத்தலில் தனிமை!
கச்சிதமாய் கைப்பற்ற
இதுவே தருணம்
சிந்தனை சிறக்க
இதுவே தருணம்
புதிய முய்ற்சிகள் சிறக்க
இதுவே தருணம்!
மெலிவு விரிவு
பாதை கொண்ட
வாழ்க்கை இது…
நாடி நடக்கும்
நடையில் தங்கும்.
நாளை தொடரும்
நாட்டங்கள்.
தேடிப் போகும் பாதை
நெடுகிலும்,
தேய்ந்து போன
ஏக்கங்கள்!
மேட்டிலெல்லாம்
உருளும் கற்கள்,
பள்ளமெல்லாம்
பருத்த கள்ளி!
பாய்ந்து செல்லும்
ஆசைக் குதிரை…
ஆய்ந்து கொல்லும்
ஆழ்ந்துள்ளப்
பய வியர்வை!
ஏங்கி நிற்கிறது!
எதிர்பார்ப்பு…
அங்கு நெடும்பாதை முழுக்கவும்
மலர் பாதடி தேடிக்கொண்டு?
ஏது முளைக்கும் மலர் வனங்கள்?
பாறை மேலிலும்,
கள்ளிப் புதரிலும்…!
ஒரு சுடு மணல்க் காடு
வாழ்க்கை.
வரும் காற்றிலும் ஈரம்
பஞ்சம்!
முளைத்தாலும்
மரங்களங்கே,
முள்ளில்லா
மலர்கள் என்று
முளை விடுமா ஊற்றுக்கள்?
பரிதாப தொணி
நிலை கொண்டு.
விழுங்கிடும் வயிறு
விதிக்கு உண்டு.
அழுந்திய நெஞ்சக்
கனாவை,
அருந்திடும் ஆசை என்ன!
இடைக்கிடை தடுக்கிட
இமை நீட்டும்
புதை கற்கள்,
துரத்திக்கொண்ட ஓட்டம்
புரப்பட்ட வாழ்க்கை இது…
தடைகள் என்ன,
உடைத்துச் செல்ல
தாவி ஓடும் குதிரை இது!
தூவி வைத்த
சாவி எல்லாம்
சேகரித்து வெற்றி திறப்பேன்!
தூரப் பாதை …
நெலிந்த பயணம்…
ஒழிந்த உச்சிக் குண்றினைக்
கடக்க,
ஒளிந்த நேர
நுழைவினுள் நான்.
– Shahi sadique
Kegalle
அழகிய குறும்படகு
நீண்டதொரு பயணம்
தனிமையின் சோகம் வெறுத்து சேர்த்தேன் சில நண்பர்களை
கை வலிக்கப்
படகு வலித்தேன்
‘உன்னைப்போல் படகு எனக்கு இருந்த்தால் நன்றாக இருந்திருப்பேன். உன்னையும் பார்’ என்றாள் ஒருத்தி.
‘ தேவை இல்லாமல் அடுத்தவர்களை சுமக்கிறாய் ‘ என்றாள் மற்றும் ஒருத்தி தன்னையும் நான் சுமப்பதை மறந்து.
‘அவர்களை விடு.
உதவ நான் இருக்கிறேன். ‘ நம்பிக்கையாய் இன்னும் ஒருத்தி.
ஆற்றில் ஒருவன்
‘அபாயம் அபாயம்’ என்றான்.
நீரில் மூழ்கி நின்றான்.
கை கொடுக்க எண்ணினேன் கிட்டவில்லை அவன் கை.
இறங்கி நீந்தினேன்.
அவனைக் காணவில்லை
‘அவனுக்கா இந்த நிலைமை? ஆண்டவா!’ என மேலே பார்த்தேன்.
மர உச்சியில் அவன்.
நீரில் பிம்பத்தைக் கண்டு
காப்பாற்ற எண்ணிய
என் மடமையை உணர்ந்தேன்.
படகு தூரத்தில்…
‘ உன்னைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டாள் ஒருத்தி.
‘ அவள் சுயநலக்க்காரி.
நம்மைத் துடுப்பு வலிக்க வைத்து விட்டாள்’
எனப் புலம்பினாள் மற்றொருத்தி.
‘ உதவ நான் இருக்கிறேன் ‘ என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்த்தாள்
நம்பிக்கைக்கு உரியவள்.
‘ உன் முட்டாள் தனத்துக்கு
என்னைக் குறை சொல்லாதே !
நான் நல்லவன் தான்’ என்றான் மர உச்சியில் இருந்து கொண்டே ..
வாழ்க்கைப் படகு என்னை விட்டு போய்க் கொண்டே..
நீந்தினேன்….
மன உளைச்சல் எனும் சுழலைக் கடந்து ,
சோகம் எனும் முதலைகளை வென்று ,
குழப்பம் எனும் புயலில் போராடி, கைப்பற்றினேன் படகை ….
வேண்டாதோரை விரட்டி அடித்தேன் !!வேண்டியோரை விரும்பி அழைத்தேன் !!
இனி துடுப்பு என் கையில் …!
ஆம்! நான் இரக்கமில்லாதவள் !!வேண்டாதோருக்கு !!!
— கீதா
விருதுநகர்
யார் அறிவார் பெண்ணே
முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது
பிடித்தது முதல் இரசித்தும்
இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது
பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை
இருந்தும் இது ஏதோ செய்கிறது
யார் அறிவார் பெண்ணே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம்
அவை நமக்காய் அரும்புகிறது
சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய்
நம்முடன் வருவதும் துணையாய் இருக்கிறது
பேச்சுக்களின் தாகம் குறைந்து மௌனத்தின்
குளிர் காற்றை அருகருகில் உணர்ந்தோம்
திடீர் பார்வைகளில் சிக்கி கொண்டு புருவத்தை உயர்த்தி
ஏனென்கையில் உதடுகளை பிதுக்கி ஏதுமில்லை என்பதில் தான்
முதல் தகவல் பரிமாறினோம்
யார் அறிவார் பெண்ணே
அழகியலாய் அனைத்தும் தெரிந்திட
கூட்டமுடன் கோவில்களுக்கு தனியே சென்றோம் – காத்திருக்கும்
வரிசைதனில் நாவாட பயின்றோம்
முழுவதும் இருள் போர்த்தி இரவது வரும் போது
தொலைவினில் இருக்கும் நாம் அருகினில் ஏதோ தேடுவோம்
அகம் முழுவதும் ஆய்ந்திடுவோம்
உன்னிடம் ஓர் நாள் உரைத்திட வேண்டுமென்று
சில வார்த்தை மட்டும் நான் பத்திரம் செய்திருக்கிறேன் – அவை
தப்பியும் வந்திடாமல் காலன் என் நாவில் கலங்காமல் தடுக்கிறான்
சொல்லாமலே இனித்திடும் காலமிதில்
நின் கூந்தல் தீண்டும் நெருக்கம் போதும்
மௌனமாய் அமர்ந்திருக்கும் இருக்கைகள் போதும்
ஓரப்பார்வைகளும் கன்னம் சிவக்கும் சிரிப்புகளும் போதும்
யார் அறிவார் பெண்ணே
இரசனைகள் நம்முள் புதைந்திருக்கிறது
அதில் காதல் மலர்கள் பூக்குமோ என்னவோ
மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே.
காற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது.
ரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை.
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாய் ஒரு நுண்ணிசையை உணர முடியும். அத்துணை நுணுக்கங்கள் அதனுள் புதைந்திருக்கும்.
அதுவும் தமிழார்வம் கொண்ட மும்மூர்த்திகள் இணையும் போது அதன் தரம் விலைமதிபற்றதாகிறது.
ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள், மணிரத்னத்தின் காட்சியமைப்பு.
இவற்றில் எது நம் மனதை கொள்ளை கொண்டது என பிரித்தரிதல் அரிது. சரி நல்லை அல்லை பாடலுக்கு வருவோம்.

இந்த பாடல் வரியின் அர்த்தம் மிக எளிது. நல்லை என்றால் நன்று. அல்லை என்றால் இல்லை என பொருள்படும்.
இச்சொல் குறுந்தொகையில் வரும் சொல்லேடு. தலைவியானவள் வெயிலில் வாடுவது நல்லை அல்லை என அதில் வரிகள் வரும்.
சங்க தமிழ் சொற்களை இயல்பாக பயன்படுத்த வைத்த பெருமை வைரமுத்துவையே சேரும். இவர்கள் இணைப்பில் உருவான நறுமுகை பாடல் ஒரு சிறந்த குறுந்தொகை உதாரணம்.
அந்த மாதம் என பொருள் கூறும் ‘அற்றை திங்கள்’ என்ற வரிகளை எளிமையை நம்மை பாட வைத்திருப்பர். பூம்பாய்வா, ஆம்பல்(அல்லி) எல்லாம் நாம் ஏற்கனவே அறிந்தது தான்.
நல்லை பாடல் ஒரு ஆண் பெண்ணிடம் உரைப்பது போன்று மெல்லிய காதலை வெளிபடுத்துவது. எப்போதும் போல இதற்கெனவே சிறந்த பாடகரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
சத்ய பிரகாஷ் ராசாளி பாடலை பாடியவர். அவளும் நானுமில் எவ்வாறு வரிகளுக்கும் குரலுக்கும் வலிமை அளித்து இசையை பதிந்த உத்திதான் இங்கும் மின்னுகிறது.
வைரமுத்து வரிகளில் உள்ள சொற்களை தனித்தனி கவிதைகள் என்றே சொல்லலாம். தேடும் வேளையில் முகில் சூடி ஓடிவிட்டாய் என நிலவை உவமையாவதும் நட்சத்திர காட்டில் என்னை அலைய விட்டாய் என்பதும் நயம்.
இப்போதெல்லாம் பெண்களை மலர், பூ என்று வருணிக்கிறார்கள். சங்க தமிழில் அவள் பருவத்திற்கு ஏற்ப பூக்களின் பருவத்தை பிரித்திருப்பார்கள்.
முகை, முகிழ், மொட்டு, மலர் என மலரின் பருவங்கள் இங்கு வரிகளாய் பூத்திருக்கின்றன.
முகை, முகிழ், மொட்டான நிலைகளிலே முகந்தோட காத்திருந்தேன்.
மலர் என்ற நிலை பூத்திருந்தாள், மணம் கொள்ள காத்திருந்தேன்.
மகரந்தம் நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்.
நாறும் மலரே என்பதை தவறாக அர்த்தம் கொள்ள கூடாது. தமிழில் நாற்றம் என்றால் நறுமணம் என்றே பொருள். துர்நாற்றம் என்றால் தான் நுகர முடியாதவை.
பாடலில் நாயகனின் தேடல் அவளின் ஊடலை பற்றி நல்லை அல்லையென அளவாடுவது அற்புதம்.
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே… #நல்லைஅல்லை
நான் தேடும் போது மட்டும் நீ முகில்(மேகம்) சூடி போவதென்ன என கணைகள் தொடுக்கிறார் கவிஞர்.
நீ செய்வது நன்றில்லை நன்னிலவே, நள்ளிரவே என உருவகங்கள் உள்ளுர செய்கிறது.
பாடலின் இடையே வருல் சின்மயின் ஹம்மிங் வருடி செல்வதை உணராமல் பாடல் முடிவுறாது. நிலவின் பிரகாசத்தை போல மலர் விரியும் விடியற் போல.
ரஹ்மான்- வைரமுத்து இணையின் தமிழ் வரிகளையும் இசை வளமையும் மெச்ச யவருமில்லை. இன்னமும் மணிரத்னரத்தின் காட்சியமைப்பு மலர்வதை காண காத்திருக்கச் செய்வது நல்லை அல்லை.
