வெறித்துப் பார்க்கிறது வெளிறிய வானம்/
விடியலைத் தேடிடும் வான்மகள் தாபம்/
கொட்டிய நீரில் கரைந்ததோ துயரம்/
எட்டிப் பார்க்கும் முகத்தில் சோகம்/
சொடுக்குப் போட்டுத் தொடுக்கிறேன் கேள்வியை/
துடுக்கான வான்மகளே ஒதுங்கி நிற்பதேன்/
அடைகாத்தக் கருக்களை இழந்தாய் எதற்கு/
முறையோடு பதில்சொல் வைத்திருக்கிறேன் கணக்கு/
ஈர்த்துப் பிடித்தேன் நீரில் கருக்களை/
சேர்த்து வைத்தேன் ஆசைக் கனவுகளை/
ஒட்டிய வயிறும் பொய்த்தக் கனவும்/
கருகியப் பயிரைக் கைகளால் தடவும்/
நலிந்த உழவன் கண்களைக் கண்டேன்/
கலைந்தது கருக்கள் கிழிந்தது வயிறு/
சோவெனக் கொட்டியது மழை வெள்ளம்/
குளிர்ந்த பூமியால் சிலிர்த்தது தாய்மை/
மெல்லிய விசும்பலோடு சுருங்கியது கருப்பை/
மூடிய இமைகளில் சொட்டுது கண்ணீர்/
மீண்டும் விழுகுது பூமியில் தூறல்கள்.
கவிதை
அனலைப் படைத்து அதனை உடலில் புகுத்தி
உடலைக் காக்க நிரம்ப நீரைச் செலுத்தி
நீரினால் குருதியைக் கரைத்து நரம்பால் சுழலவிட்டு
நவரங்கமும் பரவ இருதயத்தை ஆக்கி
நாள் தோறும் புதுப்பிக்க களைப்பைக் கொடுத்து
களைப்பு நீங்க உறக்கமும் உறு பசியையும் கொடுத்து
உற்சாகம் அடைய சிறு மூளையையும் படைத்து
சிறப்பாக சிந்திக்க மனதை எங்கோ உடலில் வைத்து
ஒவ்வொரு நாளும் ஒருவாறு நாலு நிகழ்வைத் தந்து
ஒவ்வொன்றிலும் பெரிய சிறிய அனுபவங்காட்டி
தீர்வால் தெளிவையூட்டி தெளிவால் திடத்தைக் காட்டிய
தேவர்களுக்கெல்லாம் தேவே தேடுகின்றேன் உனை
தேடுவோர் மன மகிழ தேவையான உருவெடுத்து வா…
– – – நன்னாடன்.
நடக்குமா?
பேதங்களே!
வழிவிட்டு ஒதுங்குங்கள், வாழ்வில் ஒன்று பட்டு நின்றிட!
தடைகளே!
ஓரமாகச் செல்லுங்கள், உலகை உயர்த்தி நிமிர்த்திட!
இருக்கும் இடம், சுழலும் பூமியில்,
இருக்குது, சுற்றிய வண்ணம்!
இணையும் எட்டு திசையும், ஏற்றத் தாழ்வு அகற்றுவதால்!
வகுப்பும், தரமும், பிரிவுதரும்!
பேதத்தை விரட்டிவிட்டால், கைகோர்த்து நிற்கும்,
மனித இனம்!
மனித நேயத்தை, மையப்புள்ளியாக்கி,
விட்டுக் கொடுத்தலை, ஆரமாக்கி,
அன்பு, கருணையை விட்டமாக்கி,
அமைதி, ஆனந்தம் ஆதாரமாக்கி,
கைகோர்த்து நிற்கும், மனித இனம்!
நடக்குமா?
யாழினிது… குழலினிது…
அதனினும் இனிது
மிருதுளாவின் மழலை…
அதனைக் கேட்கும் ஆச்சிக்கு
ஏதுமில்லை கவலை…
உலகைக் கட்டிப்போடப் போகும்
குரல் விருட்சத்தின் விதை
இங்கு முளைத்து எழுகிறது…
கணீர் பேச்சில் உலகக்
கவனம் ஈர்க்க
தமிழ்த்தாய் வாழ்த்தில்
ஒத்திகை ஒன்று
ஆச்சியின் பயிற்சியில்
அரங்கேறுகிறது…
புயலோடு போட்டிபோட
தென்றலோடு நட்பு பாராட்ட
நற்றமிழ் ஒன்று
நடை பயில்கிறது இன்று…
மொத்தத்தில்…
இன்பத்தேன் வந்து
பாயுது காதினிலே…
மிருதுளாவின்
மழலைத் தமிழினிலே…
வடித்து வைத்த சிற்பம் உயிர்
கொண்டு வந்ததோ
படைத்துவிட்ட பிரம்மன் அவன்
வரம் வேண்டி தந்ததோ
எடுத்துக்கொள்ளத் தோணுதே
யார்வீட்டு சொத்து இது
உரியவர் என்ற உறவில் எவரேனும்
இருந்தால்
வறியவன் போல்போய் யாசகம்
கேட்பேன்
மறுத்து ஏதேனும் பேச்சு வந்தது
என்றால்
ராவணன் போல சிறையெடுப்பேன்
யார் தடுத்தாலும்
