• முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்
Tamil Poems
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கவிதை

மேடு பள்ளம்

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

மெலிவு விரிவு
பாதை கொண்ட
வாழ்க்கை இது…

நாடி நடக்கும்
நடையில் தங்கும்.
நாளை தொடரும்
நாட்டங்கள்.

தேடிப் போகும் பாதை
நெடுகிலும்,
தேய்ந்து போன
ஏக்கங்கள்!

மேட்டிலெல்லாம்
உருளும் கற்கள்,
பள்ளமெல்லாம்
பருத்த கள்ளி!

பாய்ந்து செல்லும்
ஆசைக் குதிரை…
ஆய்ந்து கொல்லும்
ஆழ்ந்துள்ளப்
பய வியர்வை!

ஏங்கி நிற்கிறது!
எதிர்பார்ப்பு…
அங்கு நெடும்பாதை முழுக்கவும்
மலர் பாதடி தேடிக்கொண்டு?

ஏது முளைக்கும் மலர் வனங்கள்?
பாறை மேலிலும்,
கள்ளிப் புதரிலும்…!

ஒரு சுடு மணல்க் காடு
வாழ்க்கை.
வரும் காற்றிலும் ஈரம்
பஞ்சம்!

முளைத்தாலும்
மரங்களங்கே,
முள்ளில்லா
மலர்கள் என்று
முளை விடுமா ஊற்றுக்கள்?
பரிதாப தொணி
நிலை கொண்டு.

விழுங்கிடும் வயிறு
விதிக்கு உண்டு.
அழுந்திய நெஞ்சக்
கனாவை,
அருந்திடும் ஆசை என்ன!

இடைக்கிடை தடுக்கிட
இமை நீட்டும்
புதை கற்கள்,
துரத்திக்கொண்ட ஓட்டம்
புரப்பட்ட வாழ்க்கை இது…

தடைகள் என்ன,
உடைத்துச் செல்ல
தாவி ஓடும் குதிரை இது!

தூவி வைத்த
சாவி எல்லாம்
சேகரித்து வெற்றி திறப்பேன்!

தூரப் பாதை …
நெலிந்த பயணம்…
ஒழிந்த உச்சிக் குண்றினைக்
கடக்க,
ஒளிந்த நேர
நுழைவினுள் நான்.

– Shahi sadique
Kegalle

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதை

இரக்கமில்லாதவள்

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

அழகிய குறும்படகு
நீண்டதொரு பயணம்

தனிமையின் சோகம் வெறுத்து சேர்த்தேன் சில நண்பர்களை

கை வலிக்கப்
படகு வலித்தேன்

‘உன்னைப்போல் படகு எனக்கு இருந்த்தால் நன்றாக இருந்திருப்பேன். உன்னையும் பார்’ என்றாள் ஒருத்தி.

‘ தேவை இல்லாமல் அடுத்தவர்களை சுமக்கிறாய் ‘ என்றாள் மற்றும் ஒருத்தி தன்னையும் நான் சுமப்பதை மறந்து.

‘அவர்களை விடு.
உதவ நான் இருக்கிறேன். ‘ நம்பிக்கையாய் இன்னும் ஒருத்தி.
ஆற்றில் ஒருவன்
‘அபாயம் அபாயம்’ என்றான்.
நீரில் மூழ்கி நின்றான்.

கை கொடுக்க எண்ணினேன் கிட்டவில்லை அவன் கை.

இறங்கி நீந்தினேன்.
அவனைக் காணவில்லை

‘அவனுக்கா இந்த நிலைமை? ஆண்டவா!’ என மேலே பார்த்தேன்.
மர உச்சியில் அவன்.

நீரில் பிம்பத்தைக் கண்டு
காப்பாற்ற எண்ணிய
என் மடமையை உணர்ந்தேன்.

படகு தூரத்தில்…

‘ உன்னைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டாள் ஒருத்தி.

‘ அவள் சுயநலக்க்காரி.
நம்மைத் துடுப்பு வலிக்க வைத்து விட்டாள்’
எனப் புலம்பினாள் மற்றொருத்தி.

‘ உதவ நான் இருக்கிறேன் ‘ என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்த்தாள்
நம்பிக்கைக்கு உரியவள்.

‘ உன் முட்டாள் தனத்துக்கு
என்னைக் குறை சொல்லாதே !
நான் நல்லவன் தான்’ என்றான் மர உச்சியில் இருந்து கொண்டே ..
வாழ்க்கைப் படகு என்னை விட்டு போய்க் கொண்டே..

நீந்தினேன்….

மன உளைச்சல் எனும் சுழலைக் கடந்து ,
சோகம் எனும் முதலைகளை வென்று ,
குழப்பம் எனும் புயலில் போராடி, கைப்பற்றினேன் படகை ….
வேண்டாதோரை விரட்டி அடித்தேன் !!வேண்டியோரை விரும்பி அழைத்தேன் !!

இனி துடுப்பு என் கையில் …!
ஆம்! நான் இரக்கமில்லாதவள் !!வேண்டாதோருக்கு !!!

— கீதா

விருதுநகர்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
அறிவியல்

குரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் ?

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

நமது புவியில் எண்ணற்ற உயிரனங்கள் வாழ்கின்றன, ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியை கட்டுபடுத்தும் வல்லமையை கொண்டிருக்க வில்லை.

மீன்களும் மிருகங்களும் தன் கானக வாழ்வை கடைபிடித்த போதும் மனித இனம் பிரபஞ்ச தூரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறது. பூமியில் வேறு எந்த பிராணியும் மனிதனை போல சிந்தித்து இருப்பிடங்களை அமைத்து அதற்கேறப் தன் சூழலை தகவமைத்து கொண்டிருக்க முடியாது.

பரிணாம வரிசை பட்டியலில் உச்சத்தை தொட்டிருக்கும் மனிதன் அதன் எல்லைகளையும் தாண்டி இந்த புவியின் மேற்பரப்பை ஆள்கிறான். அப்படியானால் பரிணமிக்கும் முன்பு மனிதன் என்னவாக இருந்திருப்பான்?

நுண்ணிய பாக்டீரியா முதல் உலகின் மிகப்பெரும் உயிரினமான நீலத்திமிங்கலம் வரை அதனதன் சுழற்சியில் எண்ணற்ற பரிணாமங்களையும் உடல் தகவமைப்பு மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டுதான் தற்போதைய நிலையை அடைந்துள்ளன, இது செடிகள் முதல் சிங்கங்கள் வரை பொருந்தக்கூடிய இயற்கை காரணி.

டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம்(Origin of Species) என்ற புத்தகத்தில் பரிணாம கோட்பாடை விளக்கும் போது ஊர்வன முதல் பாலூட்டிகள் வரை ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்றார். அதாவது எல்லா விலங்கினங்களும் ஒரே மாதிரியான சிறிய உயிரிலிருந்து தான் பரிணமித்திருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாக இருந்தது.

அந்த வகையில் பார்த்தால் மனிதன் மற்றும் மற்ற குரங்கு வகைகள் ஒரே மாதிரியான மூதாதையர்களிடம் இருந்து தான் தற்போதைய நிலைக்கு வளர்ச்சி அடைந்திருக்க முடியும் என்றார். அறிவியலின் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட இந்த கொள்கை, டார்வினை கண்டு உலகை வியக்க வைத்தது.

சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில் பிறந்தவர். சிறு வயது முதலே புழுக்கள் பூச்சிகள் மீது ஆர்வம் கொண்டிருந்தவரை அவரது அப்பா தன்னைப் போல மருத்துவர் ஆக்க விரும்பினார்.

டார்வின் அதற்கு உடன்படாததால், சரி இறையியல்(Theology) படிக்க வைப்பது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இறையியல் என்றால் கடவுள் சார்ந்த இறை தத்துவங்கள் பற்றியான ஆய்வு படிப்பு. டார்வினோ அதைவிடுத்து இயற்கையியல் தேடி கற்று தேர்ந்தார்.

Beagle Voyage

மனிதனின் பயணங்கள் எத்துணையோ அரிய பிரம்மிப்புகளை சந்திதுள்ளன. சில பயணங்கள் மனித வரலாற்றையும் உலகை நாம் பார்க்கும் கோணத்தையும் மாற்றுவதாக அமைந்து விடுகிறது. அத்தகையதே டார்வின் மேற்கொண்ட முதற் கடற்பயணம்.

கடல்பயணங்களுக்கு புகழ்பெற்ற இங்கிலாந்து பல நாடுகளில் காலணி ஆதிக்கத்தின் வழியே உலக வரைபடத்தை திருத்தி எழுதியுள்ளது. அதிகாரத்தை செலுத்த நங்கூரம் வீசிய அதே சமயம் சில அறிவார்ந்த பயணங்களும் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதில் ஒன்றுதான் 1831 ல் மேற்கொள்ளப்பட்ட எச்.எம்.எஸ் பீகள்(HMS Beagle) கப்பலின் ஆய்வு பயணம். ஐரோப்பாவின் முக்கிய அறிவியலார்களுடம் இளைஞனாக இருந்த டார்வினுக்கும் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. டிவோனாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கானரி, வெர்தா பல நிலப்பகுதிகளை பயண வழி ஆராய்ந்தது.

அவற்றில் கவனிக்க தக்கது காலபாகோஸ் தீவு(Galapagos). இந்த தீவில் உலகின் வேறு எங்கும் அறியப்படாத அதிசயதக்க தாவர விலங்கினங்கள் வாழ்கின்றன அல்லது அவ்வாறு பரிணமித்திருக் கின்றன.

எரிமலை சாம்பல் நிறைந்த காலாபாகோஸ் தீவுகளில் ஊர்வன இனத்தைச் சார்ந்த பல்லிகள் அதன் மற்ற உறவினர்களை போல அல்லாது விந்தையாக கடலில் நீந்தி மீன்களை உண்டு வாழ்கின்றன. எங்கு சிறிய உயிரினங்களை கண்டாலும் படிமங்களை கண்டாலும் ஓடி வந்து அதை சேகரித்து வைப்பார் டார்வின். ஆயிரக்கணக்கில் குறிப்புகளும் எழுதி வைத்தார்.

ஐந்து ஆண்டுகள் நீண்ட இந்த பயணம் டார்வினை பல்வேறு கொள்கைகளை உலகிற்கு அள்ளித்தர உந்தச் செய்தது. வினோத சந்திப்புகளும் சேகரித்து வந்த எலும்புகளையும் வைத்து டார்வின் ஆராய் துவங்கினார். தனது ஆய்வுகளை புத்தகமாக வெளியிட்டார்.

Origin of Species

தன் வாழ்வில் பல சோதனைகளை சந்தித்து வெளியிட வேண்டாம் என்ற நிலையிலிருந்த போது வால்லஸ் என்ற அறிஞரின் உதவியோடு 1859 ஆம் ஆண்டு இயற்கை தேர்வின் உயிரினங்களின் பரிணாம் தோற்றம்(Origin of Species by natural selection) என்ற வரலாற்று சிறப்பு மிக்க நூலை வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் உயிர்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரிணமிக்கின்றன என்பதை பற்றியும் சூழலுக்கும் உயிர் பிழைத்தலுக்காகவும் அவற்றின் உரு இயல் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை பற்றியும் புதிதாக விளக்கம் தந்தன.

அந்த புத்தகம் மறைமுகமாக ஒவ்வொரு உயிரும் ஒற்றை மூதாதையார்களிடம் இருந்து வளர்ச்சி அடைந்து அதன் தக்கன பிழைக்கும் ஆற்றலுக்கு ஏற்றவாறு வெவ்வேறு உருவ அமைப்புகளை பெற்று பரிணமிக்கன்றன எனவும் விளக்கம் தந்தது.

தேவைக்கேற்ப உடல் மாற்றமும் தேவையற்று போன பாகங்கள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்றும் சொன்னார். உதாரணமாக மனித குரங்குகளுக்கு நீளமான கைகள் இருப்பதால் வால் தேவைப்படுவதில்லை. ஒரு பறவையின் அலகு பெரிதாக இருந்தால் கொத்துவதற்கு எதுவாகவும் வேகமாகவும் இருக்க அவை தாமாகவே சிறியதாக கூர்மையாக பரிணமித்து விடும் என விவரித்தார்.

விலங்குகளில் திறமை உள்ளதே பிழைக்கும்(Survival of fittest) அதன் வம்சமே வளர்ச்சி பெற்று ஒரு இனத்தை தோற்றுவிக்கும். உயிர்பிழைத்தலின் பண்புக்கூறுகள் அதன் தலைமுறைக்கும் தொன்றுதொட்டு வழங்கப்படும். மற்றவை காலத்தால் அழிந்து போய்விடும் என்பது இயற்கையின் விதி.

Descent of man

பின்னர் 1871 ல் மனிதனின் முன்னோர்கள்(the Descent of man) என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிட்டார். அது மனிதனின் தோற்றம் பற்றியும் இனப்பெருக்க தேர்வுகளை பற்றியும் விரிவாக ஆராய்ந்தது. பாலுட்டிகள் எவ்வாறு தனது இனப்பெருக்க தேர்வுகளை மேற்கொள்கின்றன, மனிதனின் ஒவ்வொரு படிநிலைகளை ஆராய முற்பட்டிருப்பார்.

உலகமெங்கும் சர்ச்சைகள் தீயாய் பற்றி எரிந்தன. ஏனென்றால் அதுவரை இறைச்சார்ந்த மனித உருவாக்கத்தை பரப்பிக் கொண்டிருந்த மதவாதிகளுக்கு அது பெரும் இடியாக இருந்தது. எல்லா மதங்களும் மனிதன் கடவுளால் உருவாக்கப்பட்டவன் என்ற ஆதிக் கருத்தைதான் போதித்து வருகின்றன. திடீரென்று அவன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று சொல்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Regional Views

கிறித்தவ மதமும் இஸ்லாமிய மதமும் கடவுளால் தான் மனிதன் உருவாக்கப்பட்டான் என்றும் குறிப்பாக ஆதாம் ஏவால் ஆப்பிள் சாப்பிட்டதால் உணர்வுகள் ஏற்பட்டு உறவு கொண்டதால் தான் மனித இனம் தோன்றியதாகவும் அது பிறப்பு முதலே பாவங்களை சுமந்து கொண்டிருப்பதாகவும் கிறிஸ்தவம் சொல்கிறது.

எகிப்திய, கிரேக்க கதைகளிலும் கடவுள் மனித இனத்தை உருவாக்கியதாகவும் பேரழிவுகளில் அவர் மீண்டும் அவதரித்து காத்தருள்வார் என்றுமே கூறப்படுகிறது. இந்து மதத்தின் முதல் மனிதனான “மாது”வை பிரளயத்தின் போது விஷ்ணு மீனாக அவதாரம் எடுத்து காப்பார். அவனிடமிருந்து யாவரும் தோன்றினார்களாம்.

இந்து மதம் பல்வேறு மரபுகள் கொண்டதால் பல கதைகள் உள்ளது. மனிதன் நான்கு தலை பிரம்மாவால் உருவாக்கப்பட்டவன் என சொல்கிறது. பிரம்மனே முக்கடவுள்களில் படைக்கும் பணியை செய்பவர். சிவன் அழிக்கும் தொழில் கொண்டவர்.

மற்றொரு கதையாக பிரசாஸ்பதி என்ற முனிவரின் உருவாகத்தால் தங்க முட்டையிலிருந்து உலகம் வந்ததாகவும் அங்கு மனிதர்கள் உருவானதாகவும் சொல்கிறது. இது சில கிரேக்க கதைகளுடனும் ஒன்றிப்போகிறது.

அதே இந்து மதம் தான் விஷ்ணுவின் தசவதாரத்தில் உயிர்களின் பரிணாமத்தை மறைமுகமாக விளக்குகிறது. மச்ச(மீன்) அவதாரம் தொடங்கி கூர்ம(ஆமை) அவதாரமாய் பரிணமித்து வராக(பன்றி), நரசிம்ம(சிங்கம்) அவதாரம் கொண்டு மெல்ல வாமனனாகி இறுதியில் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் உயர்குணம் கொண்ட மனிதராகிறார் கண்ணன். ஆனால் தசாவதாரத்தை அறிவியல் கண்ணோட்டத்தோடு யாரும் காண்பதில்லை.

Controversy

18 நூற்றாண்டின் காலத்தின் பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். எனவே டார்வினின் கொள்கை பொது மக்களிடம் இருந்தே பெரும் கேள்விக்கு உட்பட்டது.

மதவாதிகள் இந்த சர்ச்சையை எப்படி எதிர்கொள்வது என்று விதவிதமான சிந்தித்து சர்ச்சை எழுப்பினர். பரிணாமக் கொள்கை நேரடியாக கடவுளை சோதிப்பதாக கண்டனம் செய்தனர். தங்கள் வாழ்வியலை பாதிக்கும் பெரும் அச்சுறுதல்லாக ஐரோப்பிய தேவாலயங்கள் டார்வினை கழுகு கண்ணோடு பார்த்தது.

மதவாதிகளோடு அன்றைய அறிவியலார்களே இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை ஒரு நம்பகமான கோட்பாடாக ஏற்க மறுத்தனர். மேலும் இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையெனவும் டார்வின் வேண்டுமென்றால் குரங்கு வம்சத்தின் வழி வந்திருக்கட்டும் நாங்கள் இல்லை என்றார்கள்.

உலகம் தட்டை அல்ல கோளம் என்றும் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றும் உரைத்து விளக்கிய கோபர்நிகாஸ், கலீலியோ போன்றோர் கிறித்தவ தேவாலயத்தால் பல்வேறு மதவாதிகளின் எதிர்ப்பை பெற்றனர், கல்வீச்சு , வீட்டுச்சிறை என சித்திரவதைகளை அனுபவித்தனர்.

டார்வின் வரலாற்றிலும் அவர் பல்வேறு வித சர்ச்சைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அவரது தலையை குரங்கு உடலுடன் பொருத்தி கார்டூன் வெளியிட்டன அன்றைய பத்திரிக்கைகள். அவர்கள் கெட்ட முக்கிய கேள்வி மனிதன் குரங்கிலிருந்து வந்திருந்தால் ஏன் மனித குரங்குகள் ஏன் இன்னும் குரங்காகவே உள்ளது என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கான பதில் எளிது.

ஒற்றை வகையான மூதாதை உயிரிலிருந்து வெவ்வேறு வகையான குரங்கினங்கள் உருவானது. நியண்டர்தால், ஹோமோ எரக்டஸ், மனித குரங்குகள் மற்றும் ஹோமோ செபியன்ஸ் எனும் மனிதனும் பரிணமித்தது இன்றைய நவீன அறிவியலில் நிருபணம் ஆகியுள்ளது. மனிதன் இன்னும் பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறான். மனிதன் உண்டாக்கிய சுழலால் மனித குரங்குகளும் வேறுவகையான மாற்றத்தை எதிர்கொள்கிறது.

அன்று மட்டுமல்ல அதன் பின்னரும் டார்வின் கோட்பாடுகளை பாடதிட்டமாக அமைக்க பல்வேறு நாடுகளில் தடைவிதிக்க பட்டிருந்தன. அது இறை நம்பிக்கையை சோதிப்பதாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

அமெரிக்காவில் ஒருமுறை இறைவனின் கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி டார்வின் பாடத்திட்டத்தை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு கொண்டு செல்லபட்டது. ஆனால் இறுதியில் டார்வின் கோட்பாடே அறிவியல் ரீதியானது என்று கோர்ட் ஆணையிட்டது.

2017 செப்டம்பரில் துருக்கி நாட்டின் உயர்கல்வி பாடத்திட்டத்தில் இருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பாடம் முழுவதுமாக அகற்றப்பட்டது. அது மாணவர்களுக்கு ஏற்பில்லாத அதிகப்படியான அறிவியல் விளக்கங்களை கொண்டிருப்பதாக காரணம் சொன்னார்கள்.

இந்தியாவிலும் சார்லஸ் டார்வின் கொள்கை அறிவியல் ரீதியாகவே தவறானது. குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் சொல்லவில்லை. மனிதன் மனிதனாக மட்டுமே இருந்தான் என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சத்யபால் சிங் கூறினார்.

இவருக்கு கீழ் தான் கல்வித்துறை வருகிறது. நல்லவேளை பல்வேறு அறிவார்ந்த எதிர்ப்புகளால் இந்த சர்ச்சை அப்படியே காணமல் போய்விட்டது.

இருப்பினும் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று நேரடியாக அவர் குறிப்பிடும் அளவிற்கு டார்வினிடமும் ஆதாரம் இல்லை. அவரும் எந்த இடத்திலும் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று நேரடியாக சொல்லவில்லை. மூதாதையர்கள் ஒன்றை போன்றவர்கள் என்றே சொன்னார்.

ஹோமோ செபியண்ஸ் என்ற மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் கண்டறிதலுக்கு அவர் வெளிச்சம் மட்டுமே போட்டுக் கொடுத்தார். அவர் இறந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த பல்வேறு படிமங்களும் எலும்புகளும் அவரது கூற்றை ஏற்றுக் கொள்ள வைத்தன. இருப்பினும் சில வகை மனித இனங்களின் படிமங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

முக்கியமாக டிஎன்ஏ வின் கண்டுபிடுப்பு மனிதர்களின் மரபணுக்கள் நூற்றாண்டுகளாக எவ்வகையாக மாறுதல்களை சந்தித்து வந்தன என்பதை வெளிபடுத்தியது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்கள் டார்வின் கொள்கைகளை வேறு நிலைக்கு எடுத்துச் சென்றன. ஆனாலும் அவருக்கான எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்துதான் வருகிறது.

மனித இனத்தை பற்றியான அறிவு தற்போது மேம்பட்டு இருப்பது டார்வினின் தயவால் தான். இன்னும் தெளிவான உயர் ஆராய்ச்சிகளுக்கு பின்னே இதை விட துல்லியமான விதி ஒன்று கண்டுபிடிக்கப் படும் வரை டார்வின் கொள்கை விலக்க இயலாத அறிவியல் ஆதாரமே.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
திரை விமர்சனம்

கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் – The Shawshank Redemption (1994)

உலக திரையரங்குகளில் வெளியாகி 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் IMDB தரவரிசையில் முதல் இடத்தை சிறை வைத்திருக்கிறது இந்த கைதிகள் பற்றிய திரைப்படம். இரு சிறை வாழ் கைதிகளின் நட்பும் நாயகனின் அசராத சாகச இறுதிக் காட்சி கொடுக்கும் நம்பிக்கையும் நம்மை என்றுமே ஆச்சர்ய படுத்த தவறியதில்லை.

பல்ப் ஃபிக்சன் – Pulp Fiction (1994)

90 களில் வெளியாக மிக முக்கியமான கிரைம் திரில்லர் படம். குவெண்டின் டரண்டினோவின் இந்த படைப்பு அதன் கதை சொல்லும் விதத்திற்காகவே பல்வேறு ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்தது. பெரும்பாலும் வசனங்களாலே நகரும் இந்த படம் ஹாலிவுட் சினிமாவின் சிறந்த மசாலா கேங்க்ஸ்டர் வகை.

சிண்டலர்ஸ் லிஸ்ட் – Schindler’s List (1993)

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் பெரும் இன அழிப்பிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை நாசி படையிடமிருந்து காப்பாற்றிய ஜெர்மானியர் கதை திரைப்படத்தின் கருவாக அமைந்துள்ளது. தீதிலும் நன்மை உண்டென உலகிற்கு உணர்த்திய இந்த நிஜ கதையை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியுள்ளார்.

செவன் – Se7en (1995)

இந்த பட வரிசையில் கொடூரமான திரைப்படமாக இதனை கொள்ளலாம். கொலைகாரன் பெருந்தீனி, பேராசை, சோம்பல், கடுங்கோபம், தற்பெருமை, காமம், பொறாமை போன்ற எழு கொடிய பாவங்களை செய்பவர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்கிறான். அதை கண்டுபிடிக்க வரும் மார்கன் ஃப்ரீமேன், பிராட் பிட் ஆகியோருக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

ஃபாரஸ்ட் கம்ப் – Forrest Gump (1994)

டொம் ஹாங்கின் எனும் அதிசிறந்த நடிகனுக்கு ஆஸ்கர் பெற்றுதந்த திரைப்படம். தனது சிறுவயதில் இருந்து கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை அவர் பகிர்வது போன்ற கதை திரைப்படமாக பட்டிருக்கும். புத்தி கூர்மை குன்றிய கதாநாயகனின் முதல் காதல், முதல் ஓட்டம் என விவரித்து மேசையில் அமரும் போது ஒரு சிறந்த படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

குட்பெலாஸ் – Goodfellas (1990)

அமெரிக்க மாபியா தலைவன் மற்றும் அவரது நண்பர்களின் வாழ்வியலை பற்றிய கிரைம் சினிமா. கேங்க்ஸ்டர் திரைவரிசையில் என்றுமே இந்த படத்திற்கு ஒரு இடம் உண்டு. நேர்த்தியான திரைக்கதை வழியாக ஒரு உண்மை மாபியா வரலாற்றை நமக்கு விருந்தளித்திருப்பார்கள். இன்றைய பல கிரைம் படங்களுக்கு இதுவே முன்னோடி.

Toy Story (1995)

உலகின் முதல் முழு கணினி அனிமேஷன் திரைப்படம். இதன் கதையே சுவாரசியமானது, ஒரு சிறுவனின் வீட்டில் இருக்கும் பொம்மைகளுக்கு உயிர் இருக்கும் மேலும் அவை ஒரு குழுவாக வாழும். சிறுவனின் பிரிய பொம்மையாக இருக்கும் தலைவனுக்கு போட்டி வந்துவிட அங்கு நடக்கும் சேட்டைகளும் பின்னர் இருவரும் இணைத்து செயல்படும் மிஷன் ரசிக்க வைக்கும்.

த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் – The Silence of the Lambs (1991)

சிறந்த படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இதன் திரைக்கதை சீரியல் கொலைக்காரனை பற்றியது. பெண்களை கொன்று அவர்களது தோலை உறிக்கும் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க FBI அதிகாரியான நாயகி கைதியாக இருக்கும் மற்றொரு கொளையளிடம் ஆலோசிக்கிறாள். உளவியல் சார்ந்த பல திகில் காட்சிகளோடு படம் நகர்கிறது.

பிரேவ் ஹார்ட் – Braveheart(1995)

தலைச்சிறந்த போர் வரலாற்று திரைப்படங்களின் ஒன்று. புதிதாக திருமணம் செய்துக்கொண்ட தனது காதலி ஆங்கிலேய படைகளால் கொல்லபடவே அன்றைய இங்கிலாந்து அரசரை எதிர்த்து ஒரு மக்கள் புரட்சியை செய்கிறார். அதுவே 12 நூற்றாண்டில் ஸ்காட்லாண்ட் சுதந்திர போராட்டித்தின் வித்தாக அமைகிறது. பிரபல ஹாலிவுட் நடிகரான மெல் கிப்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

The Usual Suspects (1995)

மற்றொமொரு ஆஸ்கர் திரைப்படம். சாதாரணமாக ஒரு குற்றவாளியை விசாரணை செய்வதாய் தொடங்கும் கதை பின்னர் பல்வேறு படிநிலைகளில் டுவிஸ்ட் வைத்து மர்மக்கதையாக நீள்கிறது. இன்றைய பல்வேறு முன்னணி கலைஞர்கள் ஒருசேர இந்த படத்தில் நடித்துள்ளனர்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
திரை விமர்சனம்

சூரரைப் போற்று – உண்மை கதை

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

பிரபல சாதனையாளர்களையும் பெயர் மறந்த இந்தியர்களையும் வைத்து படம் உருவாக்குவது சினிமா வரலாற்றில் அவ்வப்போது அரங்கேறும் சிறப்பு வாடிக்கை தான். அந்த வகையில் தற்போது சூர்யா மிரட்டியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் தரவு வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தி அளவிற்கு வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்படும் பயோபிக் படங்கள் தமிழில் அரிது தான். பாலிவுட் திரையுலகம் தோனி, நீர்ஜா, மணிகர்ணிகா, மேரி கோம், தங்கல் என மோடி, சில்க் ஸ்மிதா வரை பல வெற்றி படங்களை தந்திருக்கிறது. மணிரத்னத்தின் இருவர், சமீபத்திய கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி என சிலவற்றை தவிர்த்து வேறு குறிபிட்ட வெற்றி படங்கள் இல்லாலது கோலிவுட்டின் குறையே.

டீசரில் சூர்யாவின் ஆவேசத்தையும் நடிப்பு வெறியையும் பார்க்கும் போது அந்த குறை தீரும் என ஆறுதல் கிடைக்கிறது. இறுதி சுற்று படத்தை தந்த சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரும் இந்த திரைப்படம் ஏர்டெக்கான் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது.

vikatan_2020-01_0c135c04-6d86-457e-9376-75de60110ee5_soorai.png

நெடுமாறன் ராஜாங்கம் என்ற பெயரோடு வாரணம் ஆயிரம் சாயலில் வரும் சூர்யாவின் கதாபாத்திரம் கோபிநாத் வரலாற்றோடு மிக ஒன்றியே எடுக்கப்பட்டிருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத் துவக்கத்தில் இராணுவ விமான கேப்டனாக பணியாற்றிவர். 1978 பங்களாதேஷ் பிரிவினை போது போர் விமானங்களை இயக்கியிருக்கிறார். அதன் பின் தனது 28 வயதிலேயே ராணுவ ஓய்வை வாங்கிக்கொண்டு தன் ஊரான கர்நாடகா வந்து சேர்ந்துவிட்டார்.

சில தொழில்கள் செய்த பின் அவர் துணிந்து இறங்கிய சவால் தான் குறைந்த செலவில் விமான பயணத்தை தரும் திட்டம். அதற்கு முதலில் விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமல்லவா. அங்கேயே ‘கையில் 6 ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு ஒரு ஏரோ ப்ளைன் கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறேன்னு சொன்னப்ப, எவண்டா இந்த லூசு என பார்த்தது’ என்ற சூர்யாவின் வசனமுடன் ‘பருந்தாகிறது ஊர்குருவி’ என ஜீவிபிரகாஷ் பாடல் தொடங்குகிறது டீசர்.

டீசரின் ஒரு காட்சியில், டெக்கான் ஏர் என்ற விமானம் பின்புலமாக வருவதை நீங்கள் கவனிக்க தவறியிருக்கலாம். தனி விமான நிறுவனம் பேச்சைத் தொடங்கிய இடத்திலிருந்தே கோபிநாத்துக்கு பல தோல்விகள், அவமானங்கள் என அடிமேல் அடி விழுந்தது. பல வருட போராட்டத்திற்குப் பிறகு, அத்தனை அனுமதியையும் பெற்று, 2003-ம் ஆண்டு ஏர் டெக்கான் (Air Deccan) விமான நிறுவனத்தைத் தொடங்கினார்.

18 இருக்கைகள் கொண்ட விமாங்களை குறைந்த செலவில் அவர் இயக்கி வந்தார். அதிக விமான போக்குவரத்து இல்லாத குஜராத் போன்ற பகுதிகளால் இந்த விமானங்கள் இயக்கப்பட்டது. எனவேதான் இந்தியா முழுவதும் இதற்கான அறிமுகம் குறைவாக இருக்கிறது.

மிகப்பெரும் தொழில் ஜாம்வாங்களாக இருந்த டாட்டா போன்றவர்களால் கூட அப்போது விமான நிறுவனம் சாத்தியமில்லாமல் இருந்தது. ‘நான் ரத்தன் டாட்டா இல்லடா’ என்ற வசனமாகவும் அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். 2006 ல் கோபிநாத் அவரளுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Chevalier de la Legion d’Honneur அளித்து கௌரவிக்கப்பட்டது.

500 பைலட் 45 விமானம் என இருந்தாலும் வியாபார ரீதியாக பல சிக்கல்கள் வந்தது. காலப்போக்கில் வணிக பிரச்சனைகளால் 2007 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் மல்லையாவின் கிங் பிஷ்ஷர் உடன் இணைக்கப்படுகிறது. மெல்ல மெல்ல இவரின் பங்குகள் குறைந்து தனது அங்கீகாரத்தை இழக்க துவங்கினார்.

மீண்டும் எழுதப்படாத காகிதமாய் வாழ்க்கை நின்றது. ஆனால் காலம் வேறு கணக்குகளை வைத்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் கிடைத்த பணத்தில் சரக்கு விமானம், தனிபட்ட விமானம் முயற்சிகள் மேற்கொண்டார்.

Suriya-770x433.jpeg

பின்னாளில் மல்லையாவின் கையிலிருந்த பங்குகள் முழுவதையும் தனதாக்கி அதே டெக்கான் பெயரில் அரசின் உடான் திட்டத்தின் அடிப்படையில், இன்று 34 க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கம் தனி ஆளுமையாக எப்படி போராடி உயர்ந்தார் என்பது படத்தின் சுவாராசிய கதையாக அமையும்.

இந்த விமானங்கள் தற்போது பெரும்பாலும் வட மாநிலங்களிலேயே இயங்கி வருகிறது. அரசு ஒப்புதலோடு அதிகபட்ச நிர்ணய விலையாக 2500 மட்டுமே வைத்து இவை இயங்கி வருகின்றன. 2017 ஆம் மும்பை மற்றும் நாசிக் இடையே ஏர் டெக்கான் இயக்கப்பட்டது. எதிர்காலத்தில் முக்கிய இந்திய பகுதிகளிலும் வர திட்டமிருக்கிறது.

தடுக்க இயலாத சக்தியாக தன்னை தகவமைத்து கொண்ட இவர், கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருது, Personality of the Decade Award என பல விருதுகள் கௌரவிக்க தன்னைத்தானே செம்மைப்படுத்தி கொண்டார். மனதில் உறுதிகொண்டு கனவு சிறகுகளோடு பயணிக்கும் போது எத்தகைய உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு கோபிநாத் ஒரு சான்று, அது சூர்யா விற்கும் பொருந்தும் என்பதில் ஆச்சர்யமில்லை. சூரரைப் போற்று தமிழ் சினிமா போற்றும் உயரத்திற்கு பறக்க வாழ்த்துக்களுடன்..

சினிமா விகடன் இணைய பக்கத்தில் இடம்பெற்ற கட்டுரை

0 comment
0 FacebookTwitterPinterestEmail
திரை விமர்சனம்

கொரோனா வைரஸ் – ஆங்கில திரைப்படங்கள்

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேரழிவு நிகழும் போதெல்லாம் அதனை முன்னரே கணித்து விட்டதாக பல்வேறு திரைப்பட காட்சிகளும் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் உலாவரும்.

தமிழில் கமலின் தசாவதாரம், முருகதாஸின் ஏழாம் அறிவு என சில படங்கள் தொற்று கிருமி கதையை கருவாக கொண்டிருந்தாலும் அதற்கான பாதிப்பு காட்சியமைப்புகள் குறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் உலக அழிவு பற்றிய படங்களை மாதம் ஒருமுறை வெளியிட்டு கொண்டிருக்கும் ஹாலிவுட் திரையுலகில் இதுபோன்ற ஆச்சர்யங்களுக்கு குறைவில்லை. வெளிவந்த சமயத்தில் கூட சரியாக ஓடாத படங்கள் இதுபோன்ற திடீர் டிரெண்டிங் வழியாக வைரல் ஆகிவிடும்.

அந்த வகையில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் தான் கண்டேஜியன்(Contagion). 2011 ஆம் ஆண்டு ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கி வெளியான இந்த திரைப்படம் அப்போதே ஹிட் அடித்தது.

Contagion

படத்தின் நாயகி ஹாங்காங் பயணத்தின் போது அந்த நாட்டு சமையல்காரர் ஒருவருடன் கைகுலுக்கும் இடத்தில் தான் படம் துவங்கிறது. அவர் அமெரிக்கா திரும்பியவுடன் தும்மல், இருமல் என உடல் மோசமடைந்து இறுதியில் திடீரென இறந்துவிடுகிறார்.

அவரது உறவினர்கள் தொடங்கி அவர் பயணித்தில் தொட்ட இடத்தில் எல்லாம் பரவும் தொற்று நோய், பின்னர் உலகமெங்கும் பரவி விடுகிறது. அதிவேக தொற்று கிருமியை கட்டுபடுத்த இப்போது போலவே உலக விமான நிலையங்கள் முடக்கப்படுகின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எம்இவி-1 என்று அறியப்படும் வைரஸால் அடுத்தடுத்து பல கதாபாத்திரங்கள் உயிரிழக்க நேரிட, உலக இறப்பு விகிதம் கிட்டதட்ட 20% ஆகிவிடுகிறது. புதிய மருந்து கண்டுபிடிப்பது, பின்னணியில் நடக்கும் அரசியல் என பல அறிவியல் திருப்பங்கள் கொண்டு கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

தற்போது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து உலகமெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், நடப்பு நிகழ்வுகளை முன்னரே கணித்து எடுத்திருப்பது போன்ற இந்த படத்தை பற்றி பலரும் இணையத்தில் பகிருந்து வருகிறார்கள்.

இதனால் உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் தற்போது கண்டேஜியன் படம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

12 Monkeys

இது ஒரு அறிவியல் புனைவு திரைப்படம். கால பயணத்தின் வழியாக ஒரு மிகப்பெரிய தொற்று நோயை உருவாக்கி அதன் விளைவாக மொத்த மனித குலத்தையும் ஒரு குழு அழிக்க முயற்சி செய்யும். பிளேக் பரவுதல் பற்றி மிக நேர்த்தியாக காட்டப்படிருக்கும். இதே பெயரில் ஒரு ஆங்கில தொலைகாட்சி தொடரும் வந்து பிரபலமானது.

Outbreak

ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்படும் ஒரு ரகசிய வைரஸ் வெளியே பரவ ஆரம்பித்த உடன் அங்கிருக்கும் அதற்கு காரணமாக மருத்துவர்கள் அதனை எப்படி கட்டுபடுத்தி அந்த ஊரை காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.

அதை தாண்டி The Omega man, World War Z, Pandemic போன்ற திரைப்படங்கள் வைரஸால் பாதிக்கப்படும் மக்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட பிரபல ஜாம்பி படங்கள்.

End of Days Book

மேலும் பிரபல அமெரிக்க நாவல்கள் இரண்டும் வைரஸ் பரவுதலை அப்போது கணித்துள்ளன. அதில் ஒன்று 1981 ஆண்டு வெளிவந்த The Eyes of Darkness என்ற நாவல். இந்த கதையில் ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கபடும் ஒரு கிருமியில் வுகான் வைரஸ்(Wuhan Virus) பரவுவதாக 40 வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார்.

இரண்டாவது புத்தகம் Sylvia Browne எழுதிய End of Days. இதனை நீங்கள் நிச்சயமாக உங்கள் வாட்சப் ஸ்டேட்ஸ் களில் கவனித்திருக்கலாம். 2008 வெளிவந்த இந்த கணிப்புகள் சார்ந்த புத்தகம், மிக குறிப்பாக 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான தோற்று நோய் உலகமெங்கும் பரவும் என்றும் அது நுரையிரலை பாதித்து எந்த எதிர்ப்பு மருந்துக்கும் கட்டுபடாது என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஆச்சர்யம் அதோடு நிற்கவில்லை. இந்த தொற்று பரவலால் உயிரழப்புகள் ஏற்படும் என்றாலும் அது தானாகவே கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் மீண்டும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு தோன்றி பின்னர் மொத்தமாக மறைந்து விடும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

சினிமா விகடனில் வெளிவந்த பதிவு
https://cinema.vikatan.com/hollywood/article-about-hollywood-movies-virus-outbreak-predictions

0 comment
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Recent Posts

  • அவள் பார்வை
  • எனது தேவதை
  • வெறுப்பது யாராக இருந்தாலும்..
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
  • முழுமதி

Popular Posts

  • வெறுப்பது யாராக இருந்தாலும்..

  • முழுமதி

  • மிருதுளாவின் மழலை

  • அன்பே என்னிடம் நீ கூறு

  • எங்கே போகிறோம்?

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
Tamil Poems
  • முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்